திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்; பயணிகள் அலறியடித்து ஓட்டம்


திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல்; பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:31 AM IST (Updated: 30 Jun 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைப்பார்த்து பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக 15 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருப்பூர்,

பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறிவிட்டனர். இதன்காரணமாக அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இதற்காக ஜெய்வாபாய், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளிகளும், நஞ்சப்பா, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் பள்ளிகளும் இங்கு உள்ளன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் படித்து வருகிறார்கள்.

பள்ளி மாணவ-மாணவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களில் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். இவர்களுக்காக காலை, மாலை நேரங்களில் டவுன் பஸ்களை அரசு போக்குவரத்து நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இறங்கி டவுன் பஸ் மூலமாக பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் பழைய பஸ் நிலையம் பகுதி காலை, மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் வருகையால் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.

ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் வந்து செல்லும் பழைய பஸ் நிலையத்தில் தகராறுகளுக்கும். அடிதடி மோதல்களுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. நேற்று காலை பழைய பஸ் நிலையத்துக்குள் நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் ஒரு தரப்பாகவும், கே.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் மற்றொரு தரப்பாகவும் நின்று பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்.

கற்களாலும், கைகளாலும் தாக்கியதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெண் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. சினிமாவில் நடப்பது போல் துரத்தி, துரத்தி மாணவர்கள் தாக்கி கொண்டனர். மாணவர்களை தடுப்பதற்கு கூட அங்கிருந்த பயணிகள் அருகில் செல்ல அச்சமடைந்தனர். 2 மாணவர்களுக்கு கண், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து வந்து அங்கிருந்த மாணவர்களை மடக்கி பிடித்தனர். இதில் கே.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் 7 பேரையும், நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் 8 பேரையும் பிடித்து தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இவர்கள் அனைவரும் பிளஸ்-2 மாணவர்கள் ஆவார்கள். இரு பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் மாலையிலும் இதுபோல் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசார் சென்று சமாதானப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று காலையும் மாணவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு பள்ளி விடுமுறைக்கு முன்பு மோதல் ஏற்பட்டதாகவும், அதில் இருந்து மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் மாணவர்கள் கூறினார்கள். மாணவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். மாணவர்களிடையே தொடர்ந்து இதுபோல் மோதல் சம்பவங்கள் நடப்பதால் பள்ளி ஆசிரியர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். மாணவர்கள் மோதல் சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story