வால்பாறை பகுதியில் தொடர்மழை: சோலையார் அணை நீர்மட்டம் 159 அடியை எட்டியது


வால்பாறை பகுதியில் தொடர்மழை: சோலையார் அணை நீர்மட்டம் 159 அடியை எட்டியது
x
தினத்தந்தி 30 Jun 2018 10:15 PM GMT (Updated: 30 Jun 2018 6:40 PM GMT)

வால்பாறை பகுதியில் தொடர்மழை காரணமாக சோலையார் அணை நீர்மட்டம் 159 அடியை எட்டியது.

வால்பாறை,

வால்பாறை வட்டார பகுதியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு முன்பு கோடைமழை பெய்தது. தமிழகத்தில் ஏற்பட்ட வெப்பசலனம் காரணமாகவும், குறைந்த காற்றழுத்த நிலை காரணமாகவும் மழை பெய்தது. இதனால் மார்ச் மாதத்தில் 4 அடியாக இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் 25 அடிவரை உயர்ந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக மே மாதம் 28–ம் தேதி முதல் பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து கனமழையாக 20 நாட்களுக்கும் மேல் பெய்தது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அக்காமலை புல்மேடு பகுதி, சின்னக்கல்லர், நீரார் பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்தது.

இதனால் தொடர்ந்து சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் ஒவ்வொரு நாளும் 5 அடிமுதல் 8 அடிவரை சோலையார் அணையின் நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வால்பாறை வட்டார பகுதி முழுவதும் மழை குறைந்தது. ஒருசில சமயங்களில் நள்ளிரவு நேரத்தில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. இருந்த போதும் பரம்பிக்குளம் ஆழியார் திட்ட அடிப்படை அணையாக விளங்கும் சோலையார் அணை பல ஆண்டுகளுக்கு பிறகு 159 அடியை தாண்டி முழு கொள்ளளவான 160 அடியை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மழை நீடித்தால் இன்று முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ள உருளிக்கல், மாணிக்கா, குரங்குமுடி, பன்னிமேடு, சேடல்டேம், பெரியார்நகர் ஆகிய எஸ்டேட் பகுதிகளை ஒட்டிய தேயிலைத் தோட்டங்கள் சோலையார் அணை தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும் இன்று முதல் சோலையார் மின்நிலையம்–1 மற்றும் சோலையார் மின்நிலையம்–2 இயக்கப்படுவதற்கு மின்நிலையங்கள் தயார் நிலையில் இருந்து வருகிறது. சோலையார் அணை மத்திய அரசு நீர்வள ஆணையத்தின் மூலம் உலக வங்கி நிதி உதவியோடு ரூ.16 கோடியில் புணரமைப்பு செய்த பிறகு முதன்முதலாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பரம்பிக்குளம் ஆழியார் திட்ட பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் குழந்தைசாமி தலைமையில் வால்பாறை செயற்பொறியாளர் லோகநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ஜான்பாட்சா, அப்புசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் சோலையார் அணையை பார்வையிட்டு தண்ணீர் கசிவுகள் எல்லாம் அடைக்கப்பட்ட பின்பு தண்ணீர் தேக்கி வைக்கும் தன்மைகள் குறித்து ஆய்வு நடத்தினார்கள்

ஜூலை மாதம் 1–ம் தேதி முதல் மின்நிலையம்–2 இயக்கப்பட்டு ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் சோலையார் மின்நிலையம்–1–ல் உள்ள இரண்டு மின்உற்பத்தி மோட்டார்களில் ஒன்று மூலம் மின்உற்பத்தியை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையார் அணையில் 29 மி.மீ. மழையும், வால்பாறையில் 25 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 24 மி.மீ. மழையும், நீராரில் 25 மி.மீ. மழையும் பெய்துள்ளது. சோலையார் அணைக்கு வினாடிக்கு 1868.89 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையார் அணையிலிருந்து மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு 1012.62 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் 159.05 அடியாக உள்ளது.


Related Tags :
Next Story