சிவகாசி அருகே அட்டை மில்லில் பயங்கர தீ விபத்து
சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் தனியார் அட்டை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் தனியார் அட்டை மில் இயங்கி வருகிறது. இந்த அட்டை மில்லில் பழைய கழிவு அட்டைகளை கூழாக்கி அதில் இருந்து புதிய அட்டைகள் தயாரித்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அட்டை மில்லுக்கு தேவையான கழிவு அட்டைகள் டன் கணக்கில் மில்லின் ஒரு பகுதியில் சேமித்து வைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு திடீரென கழிவு அட்டைகள் இருக்கும் இடத்தில் இருந்து புகை வந்துள்ளது. இது குறித்து அட்டை மில் நிர்வாகத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமள வென பரவியது.
சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கழிவு அட்டைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கழிவு அட்டைகள் இருக்கமாக கட்டி வைத்ததால் வெப்பம் தாங்காமல் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார். இருந்தாலும் இந்த அட்டை மில்லில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடக்கிறது. கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது தீ விபத்து. எனவே இனி வரும் காலத்தில் இதுபோன்ற பெரிய தொழிற்சாலைகளில் தீ தடுப்பு சாதனங்கள் இருக்கிறதா? நல்ல முறையில் செயல்படுகிறதா என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.