படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தவித்த 4 மீனவர்கள், கடலோர காவல்படையினர் மீட்டனர்


படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தவித்த 4 மீனவர்கள், கடலோர காவல்படையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:15 PM GMT (Updated: 30 Jun 2018 8:16 PM GMT)

படகு என்ஜீன் பழுதானதால் நடுக்கடலில் தவித்த 4 மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டு வந்தனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகரில் உள்ள துறைமுகத்தில் இருந்து தினசரி ஏராளமான மீனவர்கள் பைபர் மற்றும் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். அந்த வகையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்களான ஆறுமுகம்(வயது 65), பாண்டியன்(55), சேகர்(50), குமார் (50) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு பைபர் படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செனறனர். இவர்கள் இரவு தங்கி மீன்பிடித்து மறுநாள்(அதாவது நேற்று) காலை கரைக்கு திரும்புவதாக இருந்தனர்.

அதன்படி இவர்கள் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு சென்று மீன்பிடித்து கொண்டு இருந்தனர். இரவு 8 மணியளவில் திடீரென இவரது படகு என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் இரவில் என்ன செய்வது என்று, மீனவர்கள் திகைத்து போனார்கள். தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன் மூலம் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தெரியப்படுத்த முயன்றனர். ஆனால் சிக்னல் கிடைக்காதால் அவர்களால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. நீண்ட நேரத்துக்கு பின்னர் சிக்னல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் படகு என்ஜின் பழுதானதால், நடுகடலில் தவிப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் இதுபற்றி சக மீனவர்களிடம் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால் அவர்களை தேடி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று காலை மீனவர்கள் அவர்களை தேடி சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் நவீன், சப்–இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையில் நவீன ரோந்து படகில் சென்று 4 மீனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நடுகடலில் சிக்கிக்கொண்டு இருந்த அவர்களை கண்டுபிடித்து, ஆறுமுகம், பாண்டியன், சேகர், குமார் ஆகியோரை தங்களது படகில் ஏற்றி கரைக்கு திரும்பினார்கள். மேலும் பழுதான படகை தங்களது படகில் கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். காலை 11.30 மணிக்கு இவர்கள் கடலூர் துறைகத்தை வந்தடைந்தனர். 4 பேரும் பத்திரமாக கரைக்கு திரும்பி வந்ததை பார்த்த பிறகு தான், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவத்தால் துறைமுக பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story