தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் கடைகளின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும், சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் கடைகளின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மிகப்பெரிய மாநிலமான மராட்டியத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக விற்பனை நடக்கிறது. மாசு கட்டுப்பாட்டுத்துறை வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே ஆய்வு செய்கிறது. பூக்கடை, மளிகை கடைகள், மிகப்பெரிய ஓட்டல்களில் பார்சல் உணவுக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர்.
இதனை ஒட்டுமொத்தமாக மாற்றவும், எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டும் நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட 50 மைக்ரான் அளவுக்கு கீழ் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் சட்ட விரோதமாக பக்கத்து மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக் பையை பயன்படுத்துகின்றன. பெரிய கடைகளில் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால் அந்த கடையின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் அரசாங்கம் பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பண்டைய கால முறைப்படி வாழை இலை உள்ளிட்ட இலைகளை பயன்படுத்த அரசு வலியுறுத்த வேண்டும். திருமண மண்டபங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது அது வசூலிக்கப்படுகிறதா?
இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.