வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.4,192 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்


வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.4,192 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு ரூ.4,192 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.

கரூர்,

கரூரில் வங்கியாளர் களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தாட்கோ திட்ட செயல்பாடுகள், நீட்ஸ் கல்விக்கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கடன் வழங்கப்படும் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்திற்கு 2018-19-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு ஊரக வங்கிகள் மூலம் வேளாண் கடனாக ரூ.1,999 கோடியே 55 லட்சமும், சிறு குறு மற்றும் நடுத்தர வர்க்க தொழில் மற்றும் ஏற்றுமதி கடனாக ரூ.1,092 கோடியே 24 லட்சமும், இதர முன்னுரிமை கடனாக ரூ.1,100 கோடியே 34 லட்சமும் என பொதுமக்களுக்கு மொத்தம் ரூ.4,192 கோடியே 13 லட்சம் முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் வேளாண்துறைக்கு மட்டும் 47 சதவீதம் தொகை கடனாக வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு 26 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 27 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுகள் முழுமையாக தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு சென்றடைவதற்கான ஆய்வும், அறிவுரைகளும் இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. வங்கியாளர்கள் இன்னும் சற்று சிறப்பாக பணியாற்றி கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்ய பிரகாஷ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் மணிவண்ணன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story