கட்சி தொடங்கியதும் முதல்-அமைச்சராக நினைப்பது கொடுமையாக இருக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு


கட்சி தொடங்கியதும் முதல்-அமைச்சராக நினைப்பது கொடுமையாக இருக்கிறது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 1 July 2018 4:45 AM IST (Updated: 1 July 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

கட்சி தொடங்கியதும் முதல்-அமைச்சராக நினைப்பது கொடுமையாக இருக்கிறது என கரூரில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தி.மு.க.வின் மாநில மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், திருவெறும்பூர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நமது இயக்கத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்கிற உணர்வில் தான் மாவட்டம் வாரியாக ஆய்வு நடந்தது. கழகத்தின் கட்டுப்பாட்டை நிலைநாட்ட சர்வாதிகாரத்தை கையில் எடுக்க வேண்டியதாயிற்று. அதன் பிரதிபலிப்பு தற்போது நல்ல பலனை தந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த சில களையெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இங்கு நாம் சறுக்கியதால் தான் ஆட்சியை இழந்தோம் என்பதை மறுக்க முடியாது. மேலும் தென் மண்டல களையெடுப்பு ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். இது கழக நலனுக்காகத்தான்.

மாணவரணியின் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றின் மூலம் 1967-ல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்பிய இயக்கம் தி.மு.க. என்பதை மறந்து விட முடியாது. அந்தவகையில் தி.மு.க. படிப்படியாகத்தான் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது. ஆனால் தற்போது கட்சி தொடங்கியதுமே சிலர் அடுத்த முதல்-அமைச்சர் நான் தான் என கூறுவது கொடுமையாகத்தான் இருக்கிறது.

38 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு கர்நாடகத்தில் முதல்-மந்திரி ஆகிவிட்டார் குமாரசாமி. நாம் 89 எம்.எல்.ஏக்கள் இருக்கிறோம், நம்மால் முடியவில்லை. பொறுத்தார் பூமி ஆள்வார். ஆட்சி அதிகாரம் நமக்கு முக்கியம் அல்ல. மக்கள் செல்வாக்கே நமக்கு முக்கியம்.

தற்போதைய குதிரைபேர ஆட்சியில் ஊழல் மலிந்து இருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆதாரத்தை சுட்டிக்காண்பித்து ஒரு வழி செய்வோம். சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை முதல்-அமைச்சர் ஏற்றுவதற்குரிய மாநில உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. ஆனால் தற்போது கவர்னரின் ஆய்வு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் மாநில சுயாட்சி பறிபோகிறது. இதை எதிர்த்து போராடினால் 7 ஆண்டு சிறை என கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிடுகிறது.

இதற்கு எல்லாம் அஞ்சி ஒடுங்கிவிட மாட்டோம். மாநில சுயாட்சி பறிபோகிறதென்றால் நான் ஆயுள் முழுவதும் சிறை செல்ல தயார். அடுத்த ஆய்வுக்கு கவர்னர் செல்லும்போது, நானே கருப்பு கொடி காட்ட செல்வேன். ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விவகாரத்தில் நீதித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்படுவதாக கூறப்படுவது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால், உரிய பதில் தர மறுக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஏழை-எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை உறுதிப்படுத்தும் விதமாக நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். சேலம் 8 வழி பசுமை சாலை அமைப்பதில் விவசாயிகள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபுணர்கள் குழு மூலம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆதரவை பெற்று மாணவரணியை வலுப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய தி.மு.க. மாணவரணி விளம்பர பலகையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து தி.மு.க. மாணவரணி சார்பில் ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். மாநில இணை செயலாளர் கோவை செழியன் எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அம்பாள் பாலசந்தர் உள்பட மாணவர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புலியூர் கடைவீதியில் மு.க.ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story