திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் சாய்ந்ததால் வீடுகள் சேதம்


திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் சாய்ந்ததால் வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 30 Jun 2018 11:00 PM GMT (Updated: 30 Jun 2018 9:21 PM GMT)

திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மரங்கள் சாய்ந்ததால் கூரை வீடுகள் சேதமானது.

திருத்துறைப்பூண்டி,

காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் ஏரிகள், குளங்கள் வறண்டு நிலத்தடி நீர் குறைந்து போனது. ஆடு, மாடுகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை நிலவியது.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆட்டூர், எழிலூர், நுணாக்காடு, கொத்தமங்கலம், விட்டுக்கட்டி, வரம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

ஆட்டூர் பண்டார ஓடை பகுதியில் மரம் முறிந்து மின்கம்பிகளில் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. மின்ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் மின்சாரம் நிறுத்தப்பட்டு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதேபோல நுணாக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி சுப்பையன் (வயது 60), சந்தானம் (60), மலர் (40), பாலசுப்பிரமணியன் (29), ஜெகநாதன் (50) ஆகிய 5 பேரின் வீட்டின் கூரைகள் மீது மரம் விழுந்ததால் வீடுகள் சேதமாயின.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார். 

Next Story