போலீஸ்காரர்கள் போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு


போலீஸ்காரர்கள் போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 2 July 2018 4:48 AM IST (Updated: 2 July 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர்கள் போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு,

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது 71). இவரது மகள் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஹாசனில் இருந்து தனது மகள் வீட்டிற்கு விஜயலட்சுமி வந்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் பள்ளிக்கு சென்றிருந்த தனது பேரக் குழந்தைகளை அழைத்து கொண்டு விஜயலட்சுமி வீட்டிற்கு நடந்து சென்றார். ராஜராஜேஸ்வரி நகர் 5-வது ஸ்டேஜ், 5-வது கிராசில் வரும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் விஜயலட்சுமியை வழிமறித்தனர். பின்னர் அவரிடம், அந்த மர்ம நபர்கள் தங்களை போலீஸ்காரர்கள் எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.

மேலும் இப்பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பாக தான் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்ததாகவும், அதனால் கழுத்தில் தங்க சங்கிலி அணிந்து செல்ல வேண்டாம் என்றும் விஜயலட்சுமி யிடம் சொன்னார்கள். இதனை நம்பிய அவரும் கழுத்தில் கிடந்த 65 கிராம் தங்க சங்கிலியை கழற்றி கைப்பையில் வைக்க முயன்றார். அப்போது அவரிடம் இருந்து 65 கிராம் தங்க சங்கிலியை 2 மர்மநபர்களும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்மநபர்களையும் தேடிவருகின்றனர்.


Next Story