பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி 83 பேர் கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி 83 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 5:43 AM IST (Updated: 3 July 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில், ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற அரசியல் கட்சியினர் 83 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாகை வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மனித உரிமை கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன்பு கூடினர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் முருகையன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பாளர் வேலுகுணவேந்தன், ஒன்றிய அமைப்பாளர் மோகன்.குமார், பூம்புகார் தொகுதி துணை செயலாளர் தமிழ்த்தென்றல், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் மகேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துபோக செய்யும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செல்லாததாக்கிட உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மத்திய-மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தின் உள்ளே புகுந்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி 83 பேரை கைது செய்தனர்.


Next Story