கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 110 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 110 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 5:44 AM IST (Updated: 3 July 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்,

உச்சநீதிமன்ற தீர்ப்பானது ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எனவே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ரெயிலை மறிப்பதற்காக அரியலூர் கல்லூரி சாலையில் இருந்து அரியலூர் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது அங்கு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில், அரியலூர் போலீசார் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் ரெயிலை மறிப்பதற்காக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதில் 12 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 110 பேரையும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 

Next Story