8 வழி பசுமைச்சாலைக்கு விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணிக்கு கிராமமக்கள் எதிர்ப்பு


8 வழி பசுமைச்சாலைக்கு விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணிக்கு கிராமமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 4 July 2018 4:30 AM IST (Updated: 4 July 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 8 வழி பசுமைச்சாலைக்கு விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் கால்நடைகளுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொம்மிடி,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக அமைக்கப்படுகிறது. இதற்கு அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமமக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி முடிவடைந்தது. தற்போது தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் உள்ளது. அதில் உள்ள கிணறு, மரங்கள், வீடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொக்கராப்பட்டி கிராமத்திற்கு நிலம், கிணறு உள்ளிட்டவைகளை கணக்கெடுக்கும் பணிக்கு சென்றனர். இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கால்நடைகளுடன் அங்கு திரண்டு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நிலங்களில் கருப்புக்கொடி கட்டி வைத்து தங்களது நிலங்களை பசுமை சாலைக்கு எடுக்கக்கூடாது.

இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இதேபோல் அரூர் அருகே உள்ள மாலகப்பாடி உள்ளிட்ட கிராமங்களிலும் நிலங்கள் கணக்கெடுக்கும் பணிக்கு கிராமமக்கள் நிலங்களில் கருப்புக்கொடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story