போலீஸ்காரருக்கு கேரளாவில் தேனிலவு ஏற்பாடு கொள்ளையனை விரட்டி பிடித்ததற்கு பெங்களூரு காவல் துறை பரிசு
நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் கொள்ளையனை விரட்டி பிடித்த போலீஸ்காரருக்கு பெங்களூரு மாநகர போலீஸ் துறை சார்பில் கேரளாவில் தேனிலவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் கொள்ளையனை விரட்டி பிடித்த போலீஸ்காரருக்கு பெங்களூரு மாநகர போலீஸ் துறை சார்பில் கேரளாவில் தேனிலவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
கொள்ளையனை விரட்டி பிடித்த போலீஸ்காரர்பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ். இவர் கடந்த 5–ந் தேதி அதிகாலையில் சர்ஜாபுரா ரோட்டில் மோட்டார் சைக்கிளில் கண்காணிப்பு பணியில் இருந்தார். இந்த வேளையில் சாலையில் நடந்து சென்ற அனுமந்தப்பா என்பவரிடம் ஸ்கூட்டரில் வந்த 4 பேர் செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.
இதை பார்த்த போலீஸ்காரர் வெங்கடேஷ் அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். 4 கிலோ மீட்டர் துரத்தி சென்ற நிலையில் ஒரு ஸ்கூட்டர் மீது வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளால் மோதினார். இதனால் ஸ்கூட்டரில் சென்ற 2 கொள்ளையர்களும் தவறி விழுந்தனர். இதில், கோரமங்களாவை சேர்ந்த அருண் என்பவரை வெங்கடேஷ் மடக்கி பிடித்து கைது செய்தார். இதுகுறித்து பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருணின் கூட்டாளிகளான 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
கேரளாவில் தேனிலவு ஏற்பாடுஇந்த நிலையில், கொள்ளையனை விரட்டி பிடித்த வெங்கடேசுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டுகள் தெரிவித்தனர். அவருடைய பணியை பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதியை ஒயிட்பீல்டு துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத் வழங்கினார். அத்துடன், போலீஸ்காரர் வெங்கடேசுக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் அவருக்கு திருமண பரிசும் போலீஸ் துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வெங்கடேசுக்கு தேனிலவு விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெங்கடேஷ் தனது மனைவியுடன் கேரளாவுக்கு தேனிலவும் செல்லவும் பெங்களூரு மாநகர போலீஸ் துறை ஏற்பாடு செய்துள்ளது. கேரளாவில் வெங்கடேஷ் தனது மனைவியுடன் 3 இரவு, 4 பகல் தங்குகிறார். படகு வீட்டிலும் அவர் தங்க உள்ளார். மேலும், அவர் தனது மனைவியுடன் கேரளாவுக்கு செல்ல விமான டிக்கெட் செலவும் வழங்கப்பட உள்ளது.