வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி போட்டு 10 பவுன் நகைகள்-செல்போன், ஏ.டி.எம்.கார்டு கொள்ளை


வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி போட்டு 10 பவுன் நகைகள்-செல்போன், ஏ.டி.எம்.கார்டு கொள்ளை
x
தினத்தந்தி 8 July 2018 10:45 PM GMT (Updated: 8 July 2018 8:06 PM GMT)

திருவாரூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி போட்டு 10 பவுன் நகைகள் மற்றும் செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவாரூர்,

திருவாரூர்-நாகை பைபாஸ் சாலையில் வசித்து வருபவர் முருகேசன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 45). இவர்களது மகன் கார்த்திக். நேற்று 12 மணியளவில் கார்த்திக் கடைவீதிக்கு சென்றிருந்தார். இதையடுத்து லட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் ஒரு காரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளது. இதில் 3 பேர் மட்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் லட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், வளையல், தோடு ஆகிய நகைகளை பறித்துள்ளனர். மேலும் பீரோவை திறக்க சொல்லி மிரட்டி அதில் இருந்த நகை மற்றும் ஏ.டி.எம். கார்டு, விலை உயர்ந்த செல்போன் என மொத்தம் 10 பவுன் நகை ஆகியவற்றை பறித்து கொண்டு லட்சுமியின் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு கை, கால்களை கட்டி போட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.

கடைக்கு சென்றிருந்த கார்த்திக் வீட்டிற்கு வந்து பார்த்து கொள்ளை நடந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் திருவாரூர் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொள்ளை நடந்த இடத்தில் உள்ள கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளைக்கு காரணமான மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணை கட்டிபோட்டு கத்தியை காட்டி மிரட்டி நடந்த இந்த கொள்ளை சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story