முன்னாள் நண்பர் மீது முதல் திருநங்கை சப்–இன்ஸ்பெக்டர் பரபரப்பு புகார்
முதல் திருநங்கை சப்–இன்ஸ்பெக்டர் முன்னாள் ஆண் நண்பர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பூந்தமல்லி,
இந்தியாவின் முதல் திருநங்கை சப்–இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டவர் பிரித்திகா யாசினி. இவர் தற்போது சென்னை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது முன்னாள் ஆண் நண்பர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் கூறியதாவது:–
பிரித்திகா யாசினி புகாரின் அடிப்படையில் அவரது ஆண் நண்பர் ஜனார்த்தனன் என்பவரை நேரில் அழைத்து விசாரித்தோம். ‘பேஸ்புக்’ மூலம் நட்பு ஏற்பட்டு பிரித்திகா யாசினியுடன், ஜனார்த்தனன் கடந்த சில வருட காலமாக பழகிவந்தார். அதன்பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரித்திகா யாசினி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன், பிரித்திகா யாசினிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இனிமேல் இதுபோன்ற தொல்லைகளை சப்–இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினிக்கு கொடுக்கமாட்டேன் என்ற உத்தரவாதத்தை அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
திருநங்கை சப்–இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி புகார் அளித்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.