வழிப்பறி கொள்ளையனை பிடிக்க முயன்ற ஆயுதப்படை போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு


வழிப்பறி கொள்ளையனை பிடிக்க முயன்ற ஆயுதப்படை போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 8:17 PM GMT)

தாம்பரத்தில் வழிப்பறி கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்ற ஆயுதப்படை போலீஸ்காரரை அவன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினான்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ். சாலை லட்சுமி நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 32). ஆயுதப்படை போலீஸ்காரரான இவர் பரங்கிமலை துணை கமி‌ஷனர் சிறப்பு பிரிவு போலீசில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் ஞானசேகர், சக போலீஸ்காரர்களுடன் தாம்பரம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக தாம்பரம் இந்து மி‌ஷன் மருத்துவமனை எதிரில் உள்ள சுரங்கப்பாதை அருகே ஞானசேகர் தனியாக நடந்து சென்றார்.

அப்போது சுரங்கப்பாதையையொட்டி உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் அவர் சிறுநீர் கழிக்க சென்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த வழிப்பறி கொள்ளையன் ஒருவன், ஞானசேகரிடம் செல்போனை பறித்து செல்ல முயன்றான்.

ஆனால் சுதாரித்துக்கொண்ட ஞானசேகர், அந்த வழிப்பறி கொள்ளையனை மடக்கி பிடிக்க முயற்சித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வழிப்பறி கொள்ளையன் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் ஞானசேகரின் வலது கையில் பலமாக வெட்டினான்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அந்த வழிப்பறி கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடினான். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள், அரிவாள் வெட்டுப்பட்டு வலியில் துடித்துக்கொண்டிருந்த ஞானசேகரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஞானசேகர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் இரவு நேரங்களில் விபசாரம் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. அழகிகளிடம் உல்லாசம் அனுபவிக்கவும், கஞ்சா வாங்கவும் வரும் நபர்களை வழிப்பறி கும்பல் மிரட்டி பணம், செயின் மற்றும் செல்போனை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

இந்த சம்பவங்கள் தாம்பரம், சேலையூர் மற்றும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் என 3 போலீஸ் நிலையங்களின் எல்லையில் நடைபெறுவதால், புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டி வருவதாக கூறப்படுகிறது.

ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் நடைபெறும் கஞ்சா விற்பனை மற்றும் விபசாரத்தை தடுக்கவும், வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story