கிராமத்திற்கு காலை, மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும் மாணவ-மாணவிகள் கோரிக்கை மனு


கிராமத்திற்கு காலை, மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும் மாணவ-மாணவிகள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 10 July 2018 4:15 AM IST (Updated: 10 July 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் தாலுகா வரகூரான் கொட்டாய் கிராமத்திற்கு காலை, மாலை நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவ-மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வங்கி கடனுதவி, இலவச வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர் மலர்விழி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் பென்னாகரம் தாலுகா மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சி வரகூரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பகுதியில் 1200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள சின்னகடமடை பகுதிக்கு சென்று அங்கிருந்து பென்னாகரம் மற்றும் மேச்சேரிக்கு பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் தர்மபுரிக்கு வர 4 கி.மீ.தூரத்தில் உள்ள அனுமந்தபுரத்திற்கு வந்து பஸ் பிடிக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. இதனால் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்லமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறோம். வரகூரான்கொட்டாய்க்கு ஏற்கனவே இயக்கப்பட்ட 2 பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. அந்த பஸ்களை மீண்டும் காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வரகூரான்கொட்டாய்க்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்திற்கு வரும் தார்சாலையை சீரமைக்கவும், இந்த பகுதியில் உள்ள ஏரியை தூர்வாரி சீரமைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

பென்னாகரம் தாலுகா சின்னம்பள்ளி அருகே உள்ள காளிநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. ஒகேனக்கல் குடிநீரும் வழங்கப்படவில்லை. இதனால் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் கிராமத்தில் தண்ணீர் வழங்கும் மின்மோட்டார் மற்றும் குடிநீர் குழாய்களை சீரமைத்து தண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரியிருந்தனர்.

அரூர் அருகே உள்ள வேடகட்டமடுவு ஊராட்சி ஆலங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கிறோம். இந்த பகுதியில் 8 வழி பசுமை சாலைக்காக ஏற்கனவே வரைபடம் மூலம் அளவீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அதை மாற்றி குடியிருப்பு பகுதிகள் வழியாக சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளை பாதிக்கும் வகையில் சாலையை அமைக்காமல் ஏற்கனவே வரைபடத்தில் காண்பித்தபடி அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக சாலையை அமைக்க வேண்டும், என்று கோரியிருந்தனர். 

Next Story