தமிழகத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை கும்பகோணத்தில் 100 கிலோ மீன்கள் பறிமுதல்


தமிழகத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை கும்பகோணத்தில் 100 கிலோ மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 July 2018 4:45 AM IST (Updated: 10 July 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அதிகாரிகளின் ஆய்வின்போது பல பகுதிகளில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. கும்பகோணத்தில் 100 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கும்பகோணம்,

தற்போது கேரளாவில் கடலில் மீன்பிடிக்க தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு, கோவா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு மீன்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களில் பிரேதத்தை பதப்படுத்தி வைக்க உதவும் ‘பார்மலின்’ என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை கேரள அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அபாயம் கொண்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும் மீன்களை தங்களது மாநிலத்தில் விற்பனை செய்வதற்கு கேரள அரசு தடை விதித்தது.

மேலும் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான அமரவிளை சோதனைச் சாவடி, நெல்லை மாவட்டம் வழியாகச் செல்லும் ஆரியங்காவு சோதனைச் சாவடி ஆகியவற்றில் 50 ஆயிரம் கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் இதுவரை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்ற ஆய்வை சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் விற்பனை சந்தை ஆகியவற்றில் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மேற்கொண்டனர். இங்கிருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அதிக அளவில் மீன்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கு திருக்கை, கேரை, சூறை, மயில் கோலா, ஹேமங்கோலா மீன் வகைகளில் பார்மாலின் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து காசிமேடு மீன்வளத்துறை ஆய்வாளர் ரகுமான், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தர்ராஜன், ஜெபராஜ், செல்வம், கண்ணன், உள்ளிட்ட அதிகாரிகள் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் பகுதியில் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட மீன்களையும், ஏற்றுமதி செய்வதற்காக குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பெரிய வகை மீன்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் மீன்களை ஆய்வுக்காக வெட்டி எடுத்து சென்றனர். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி ஏதாவது ரசாயனம் கலந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, பழவேற்காடு, நீலாங்கரை உள்பட பல்வேறு முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் மீன்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அங்கு கூடை கூடையாக வைக்கப்பட்டு இருந்த வெவ்வேறு வகை மீன்களை பறிமுதல் செய்து அவற்றை பரிசோதனை செய்தனர். அப்போது அவற்றில் அபாயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பார்மலின் ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும் மீன்களையும் மார்க்கெட்டுகளுக்கு சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னக்குப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு, நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது நோய்களை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய ஆய்வில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு இருப்பது மீன் உணவு சாப்பிடுவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story