பொள்ளாச்சி ராம் பாலி மருத்துவமனையில் கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார், மனைவி சப்–கலெக்டரிடம் மனு
பொள்ளாச்சி ராம் பாலி கிளினிக் மருத்துவமனையில் கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி உறவினர்களுடன் வந்து மனைவி சப்–கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பட்டேல் வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரது மனைவி சாந்தி அவர் தனது உறவினர்களுடன் வந்து நேற்று சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் ஆனந்தகுமார் லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு தனுமித்ரா, பிரியதர்ஷிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மாதம் 18–ந்தேதி பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம். பின்னர் காய்ச்சல் குணமாகி வீட்டிற்கு செல்லலாம் என்று இருக்கும் போது திடீரென்று 22–ந்தேதி வயிற்று வலியால் துடித்தார். ஸ்கேன் செய்த டாக்டர்கள் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, நியூஸ்கீம் ரோட்டில் உள்ள ராம் பாலி கிளினிக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நள்ளிரவு 12 மணிக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பிறகு 6 நாட்கள் உணவு ஆகாரம் எதுவும் கொடுக்கவில்லை. உணவு கொடுத்தால் வயிறு வீங்குகிறது என்று கூறி உணவு கொடுக்க மறுத்து விட்டனர்.மருந்து மட்டும் குளுக்கோஸ் மூலமாக கொடுக்கப்பட்டு, அவரது உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி விட்டனர். 26–ந்தேதி அவரை பரிசோதித்த டாக்டர்கள் என்ன பிரச்சினை என்று எங்களுக்கு தெரியவில்லை என்றும், கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று எழுதி கொடுத்தனர்.
ராம் பாலி கிளினிக் மருத்துவமனை டாக்டர் திருமூர்த்தி பரிந்துரையின் பேரில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தேன். அவசர சிகிச்சை பிரிவுக்கு மட்டும் தினமும் ரூ.30 ஆயிரம் செலுத்தினேன். இதை தவிர மருத்துவ செலவு ரூ.10 ஆயிரம் வரை ஆனது. கோவையில் உள்ள டாக்டர்கள் பொள்ளாச்சி சிகிச்சை மையத்தில் ஏதோ தவறு நடந்து உள்ளது என்று கூறி விட்டனர்.இதையடுத்து நானும், எனது கணவர் வேலை பார்த்த அலுவலகத்தினர், பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ராம் பாலி கிளினிக் மருத்துவமனையை அணுகி எனது கணவர் உடல்நிலை குறித்து டாக்டர் திருமூர்த்தியிடம் பேசினார்கள்.
அப்போது சிகிச்சைக்குரிய செலவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கபட்டது. இதையடுத்து டாக்டர் கடந்த 4–ந்தேதி வரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து பார்த்த செலவுக்காக ரூ.2 லட்சத்து 5 ஆயித்தை கோவை ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து கொடுத்தார். மேலும் அனைத்து சிகிச்சை முறைக்கும் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறினார். இந்த நிலையில் தற்போது உடல்நிலை முன்னேறி விட்டது கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை மாற்றிக் கொள்ளுங்கள் எங்களால் இனி பார்க்க முடியாது என்று திருமூர்த்தி டாக்டர் கூறி விட்டார். கோவை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 15 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து விட்டு, எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை. அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றி கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
ராம் பாலி கிளினிக் மருத்துவமனையால் எனது கணவரின் உடல்நிலை மோசமானது. நானும் என்னால் முடிந்த வரை நகைகளை அடமானம் வைத்து உயிரை காப்பாற்ற செலவு செய்து விட்டேன். எனது கணவரின் உயிரை காப்பாற்ற போதிய பண வசதி இல்லை. எனது கணவர் மற்றும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விகுறியாகி விட்டது. எனவே எனது கணவரின் சிகிச்சை தொடரவும், அவரது உயிரை காப்பாற்ற ராம் பாலி கிளினிக் மருத்துவமனை நிர்வாகம் உடல்நிலை சரியாகும் வரை மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.