மாவட்ட செய்திகள்

நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு - தொழில்துறையினர் வரவேற்பு + "||" + Allocation of Rs.150 crore to clean the Noyyal river - industry welcomes

நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு - தொழில்துறையினர் வரவேற்பு

நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு - தொழில்துறையினர் வரவேற்பு
நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.150 கோடியை அரசு ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் தற்போது மதுக்கடைகளின் ஆக்கிரமிப்பால் சீரழிந்து வந்து கொண்டிருக்கிறது. நல்ல முறையில் இயங்கி கொண்டிருந்த பின்னலாடை நிறுவனங்கள் பல மூடப்பட்டு விட்டன.


இதற்கு முக்கிய காரணம் மதுக்கடைகள் தான். திருப்பூரில் எந்த அளவு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதோ, அதற்கேற்றபடி புதிதாக திறக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே நூல் விலை ஏற்றம், பஞ்சு பதுக்கல், டிராபேக் சதவீதம் குறைப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.

வெளியூர்களில் இருந்து தொழிலாளர்கள் வருவது குறைந்துள்ளது. இங்கு வந்தால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விடுவோமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. பலர் வேலைக்கு செல்வதற்கு முன்பே டாஸ்மாக் கடைகளுக்கு சென்று குடித்து விட்டு அங்கேயே விழுந்துகிடக்கிறார்கள். எனவே டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்கு திறந்து, இரவு 10 மணிக்கு மூட வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது தவிர்க்கப்படும். இதன் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நிதி ஒதுக்கீடு தொடர்பாக சிஸ்மா சங்க பொதுச்செயலாளர் பாபுஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூரின் ஜீவநதியாக விளங்கி வரும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் உள்ளிட்ட கழிவுநீர் செல்வதால், மழைக்காலங்களில் அந்த நீரை விவசாயிகள் மட்டுமின்றி யாராலும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. தற்போது ஆக்கிரமிப்பு, கழிவுகளால் நொய்யல் ஆறு பாழடைந்துகிடக்கிறது.

இதனை தூய்மைப்படுத்த தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. குணசேகரன் இது தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தார். தற்போது அது நிறைவேறியுள்ளது. இது ஒரு சிறந்த அறிவிப்பாகும். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.