துறையூரில் 40 பவுன் நகை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது கார் பறிமுதல்


துறையூரில் 40 பவுன் நகை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது கார் பறிமுதல்
x
தினத்தந்தி 12 July 2018 4:15 AM IST (Updated: 12 July 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

துறையூரில் 40 பவுன் நகை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதையொட்டி முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று வந்தது. அதைமடக்கி விசாரணை செய்தபோது காரில்இருந்தவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர்.

சந்தேகமடைந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரை சாலையை சேர்ந்த தனசேகரபாண்டியன் (வயது 34), தனம்பூங்கொடி(28) என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் மேலும் விசாரித்த போது கடந்த மாதம் துறையூர் சாமிநாதன் நகரில் மெடிக்கல் கடை உரிமையாளர் பாபு வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முதல்கட்டமாக 8பவுன் நகை மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான பட்டறை சுரேஷ் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடித்தால்தான் மற்ற நகைகளை கைப்பற்ற முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி மேலும் புலன் விசாரணை செய்து வருகிறார்கள். 

Next Story