மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 184 பேர் கைது + "||" + In the Cauvery River sand resistance: 184 people involved in road traffic arrest

காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 184 பேர் கைது

காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 184 பேர் கைது
மோகனூர் அருகே உள்ள குன்னிப்பாளையம் காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 184 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு மணல் அள்ளும் பணி தொடங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட குன்னிப்பாளையம் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைத்து மணல் அள்ள பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதியில் இருந்து 2 ஆண்டு காலத்திற்கு இங்கு மணல் அள்ளும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மணல் அள்ள ஆயத்தப் பணிகள் நடைபெற்றது.


அப்போது ஊர் பொதுமக்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தொடக்க நிலையிலேயே இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் மணல் அள்ளினால் குடிநீர் ஆதாரம், விவசாயம் பாதிக்கப்படும். ஊருக்குள் மணல் லாரி வந்தால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைவு என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை குன்னிப்பாளையம் காவிரி ஆற்றில் மணல் மீண்டும் அள்ள அனைத்து ஏற்பாடுகளையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பகவதியம்மன் கோவில் முன்பு காவிரி ஆற்றுக்குச் செல்லும் சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த, பொதுப்பணித் துறை உட்கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன் (நாமக்கல்) ராஜூ (பரமத்திவேலூர்), பரமத்திவேலூர் தாசில்தார் ருக்மணி, மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் சமரசம் ஏற்படவில்லை.

குறிப்பாக இந்த பகுதியில் மணல் அள்ளக் கூடாது என்பதில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 36 பேர், 75 பெண்கள், 73 ஆண்கள் என மொத்தம் 184 பேர் கைது செய்யப்பட்டு மோகனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

கைது நடவடிக்கை ஒருபுறம் இருக்க மறுபுறம் காவிரி ஆற்றில் பூஜை செய்து போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட 184 பேரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.