ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு


ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு
x
தினத்தந்தி 13 July 2018 11:15 PM GMT (Updated: 13 July 2018 7:19 PM GMT)

ரசாயனம் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரள வியாபாரிகள் வராததால் சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவடைந்தது.

கன்னியாகுமரி,

வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மீன்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்குள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க பார்மலின் என்ற ரசாயனம் கலக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ரசாயனம் தடவப்பட்ட மீன்களை பயன்படுத்தும்போது பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். இதனால் கேரள அரசு வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்களை பலத்த ஆய்வுக்கு பிறகே கேரள மாநிலத்திற்குள் அனுமதிக்கிறது.

குமரி மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்று சின்னமுட்டம். இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு இரவு கரை திரும்பும். இதனால் கேரள வியாபாரிகள் அதிகளவில் வருகை தந்து தினமும் பல ஆயிரம் டன் மீன்களை வாங்கி விற்பனைக்காக கேரளாவிற்கு கொண்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக சின்னமுட்டம் துறைமுகத்திற்கு கேரள வியாபாரிகளின் வருகை குறைந்தது. இதனால் மீன்களின் விற்பனை சரிவடைந்தது. மேலும், ஏராளமான மீன்கள் பிடித்து வரப்பட்டும் விசைப்படகு டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் மீனவர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை கணக்கிடும்போது மீன்களுக்கு அதற்கு உரிய விலை கிடைப்பதில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வாங்கி செல்வதால் ஏராளமான மீன்கள் விற்க முடியாமல் மார்க்கெட்டிலேயே தேங்கியுள்ளது.

இதனால் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story