கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி, 750 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி, 750 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 14 July 2018 8:52 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி, 750 லிட்டர் மண்எண்ணெயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கருங்கல்,

மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

அதிகாரிகளை கண்டதும் டிரைவர், ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து, ஆட்டோவை சோதனையிட்ட போது,  அதில் சிறு சிறு மூடைகளில் 500 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புகாடு குடோனிலும், வாகனத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, அதிகாரிகள் புத்தன்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாலையோரமாக 19 கேன்களில் 750 லிட்டர் மண்எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை உரிமை கோர யாரும் வரவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் மண்எண்ணெயை கைப்பற்றி இனயம் அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும், அதை பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story