2–வது மாடியில் இருந்து தள்ளியதில் மாணவி சாவு: போலி பயிற்சியாளர் பள்ளி, கல்லூரிகளில் முகாம் நடத்தி ரூ.2½ கோடி சுருட்டல்


2–வது மாடியில் இருந்து தள்ளியதில் மாணவி சாவு: போலி பயிற்சியாளர் பள்ளி, கல்லூரிகளில் முகாம் நடத்தி ரூ.2½ கோடி சுருட்டல்
x
தினத்தந்தி 15 July 2018 4:45 AM IST (Updated: 14 July 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி சாவுக்கு காரணமான 2–வது மாடியில் இருந்து தள்ளிய போலி பயிற்சியாளர் ஆறுமுகம் 1,425 பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் பயிற்சி முகாம் நடத்தி ரூ.2½ கோடி சுருட்டியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கோவை,

கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது 2–வது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரியை (வயது 19) பயிற்சியாளர் ஆறுமுகம் தள்ளியதால் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் போலி பயிற்சியாளர் என்றும், பேரிடர் மேலாண்மை அமைப்பின் அனுமதி இல்லாமல் போலி சான்றிதழ்கள் மூலம் தன்னை பயிற்சியாளர் எனக்கூறி மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்ததும் தெரியவந்தது.

சென்னையை அடுத்த மாம்பாக்கத்தில் அலுவலகம் அமைத்து, போலி சான்றிதழ்களை காண்பித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்துள்ளார்.

ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள பழவூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் எம்.காம். படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் தொலைதூர கல்வி மூலம் டிப்ளமோ படித்துள்ளது விசாரணையில் தெரிந்தது.

அவரிடம் இருந்து கடிதம், சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அவர் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் போலி என கண்டறியப்பட்டது.

அவர் இதுவரை தமிழகம் முழுவதும் 1,425 பள்ளி, கல்லூரிகளில் மாணவ–மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளார். இதற்காக அவர் கல்வி நிறுவனங்களிடம் பணம் ஏதும் பெறவில்லை. ஆனால் பயிற்சி முடிந்த பின்பு மாணவ–மாணவிகளிடம் தலா ரூ.50 வசூலித்து சான்றிதழ் கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் ரூ.2½ கோடி வரை வசூலித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இவரது பயிற்சியில் சேர்ந்த மாணவர்களில் சிலரை தன்னார்வ தொண்டர்களாக சேர்த்து, தன்னுடன் இணைந்து முகாம்கள் நடத்தினால் மத்திய, மாநில அரசு மூலம் வேலை கிடைக்கும் என்று கூறியதால் பலரும் உதவியாக இருந்துள்ளனர்.

ஆறுமுகம் மாற்றுத்திறனாளி ஆவார். நடப்பதற்கு சிரமப்படும் இவரை கல்லூரிகள் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு அழைத்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆரம்பத்தில் ஜவுளிக்கடை, தனியார் பள்ளி ஆகியவற்றில் பணிபுரிந்த அவர் பணம் சம்பாதிக்கும் ஆசையில் போலி பயிற்சியாளராக மாறியது தெரிந்தது.

அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 27–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆறுமுகத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

ஆறுமுகம் ‘முதலுதவி’, ‘பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட்’ என்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். பொய்யான தகவல்களை கூறி சிறந்த இளைஞருக்கான விருதை தனியார் மூலம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. சென்னை மாம்பாக்கத்தில் உள்ள ஆறுமுகத்தின் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆறுமுகத்துக்கு போலி சான்றிதழ் வழங்க உதவியதாக ஈரோடு பகுதியை சேர்ந்த அசோக், ஆறுமுகத்தின் கூட்டாளிகள் சதீஷ், வினிதா, தாமோதரன், கோபால் ஆகிய 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ஒருவரை பிடிக்கவும் தீவிர தேடுதல்வேட்டை நடைபெறுகிறது.


Next Story