மின்பழுது-ஊழியர்கள் பற்றாக்குறையால் 2 ஆதார் பொது சேவை மையங்களுக்கு பூட்டு - பொதுமக்கள் ஏமாற்றம்


மின்பழுது-ஊழியர்கள் பற்றாக்குறையால் 2 ஆதார் பொது சேவை மையங்களுக்கு பூட்டு - பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

மின்பழுது மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 2 ஆதார் பொது சேவை மையங்கள் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, புதிய ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், பிழை திருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த மையங்களில் தனியார் நிறுவனம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் தலா ஒரு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து ஆதார் பொது சேவை மையங்களும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செயல்பட வேண்டும். ஆனால், அங்கு பணியாற்றும் ஊழியர் விடுமுறை எடுத்துவிட்டால் மாற்று பணியாளர் இல்லாமல் ஆதார் பொது சேவை மையங்கள் மூடப்படுகின்றன. நேற்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர் விடுமுறையில் சென்றதால், மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியர் அங்கு பணிக்கு வந்தார்.

இதன்காரணமாக, மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர் இல்லாமல் மையம் பூட்டப்பட்டது. இதனால், ஆதார் அட்டையில் பிழை திருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையே, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் பொது சேவை மையத்துக்கு மட்டும் நேற்று மின்சாரம் துண்டிப்பட்டது. இதன் காரணமாக அந்த மையம் பூட்டப்பட்டது.

அப்போது, மின்சாரம் வந்தவுடன் மையம் திறக்கப்படும் அங்கிருந்த ஊழியர் கூறியதால், புதிய ஆதார் அட்டை எடுக்க வந்திருந்த சின்னாளபட்டி காந்திகிராமம் அறக் கட்டளையின் கீழ் பராமரிக் கப்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், மதியம் 2 மணி வரை மையம் திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே, மின்பழுதை சரிசெய்வதுடன், போதுமான ஊழியர்களை நியமித்து முறையாக ஆதார் மையத்தை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story