சட்டசபை செயலாளருடன் நியமன எம்.எல்.ஏக்கள் சந்திப்பு: சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வலியுறுத்தல்


சட்டசபை செயலாளருடன் நியமன எம்.எல்.ஏக்கள் சந்திப்பு: சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

இடைக்கால தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததை யொட்டி சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு சட்டசபை செயலாளரை நியமன எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி,

புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக ஆளுங்கட்சியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு நியமிப்பது வழக்கம். தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நேரடியாக நியமித்தது.

இதை ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார். நியமனம் சரிதானா? என்பதை உறுதி செய்த பின்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் 3 பேருக்கும் கவர்னர் கிரண்பெடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மாநில அரசின் பரிந்துரையில்லாமல் எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செய்ததை எதிர்த்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதற்கிடையே தங்களுக்கு சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு செய்து தரக்கோரி சபாநாயகரிடம் நியமன எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர். ஆனால் நியமனமே செல்லாது என கூறி அதை சபாநாயகர் வைத்திலிங்கம் திருப்பி அனுப்பினார்.

இதை எதிர்த்து பா.ஜ.க.வினர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் படி தங்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். சட்டசபைக்குள் செல்லவும் முயன்றனர். ஆனால் அவர்களை சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி தனலட்சுமி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் என்ற ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்கவில்லை. வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வருகிற 19–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடைய கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு கருத்து வெளியிட்டார். அதில், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை. எனவே அவர்கள் 3 பேரும் சட்டசபைக்கு செல்லலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று பகல் 11.30 மணியளவில் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரும் சட்டசபைக்கு வந்தனர். சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்து பேசினர். அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை சட்டசபை செயலாளரிடம் கொடுத்தனர். தங்களை சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதன்படி சட்டசபைக்குள் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து தனலட்சுமி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று (நேற்று முன்தினம்) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

விசாரணையின் போது இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனவே எங்களை சட்டசபைக்குள் அனுமதிக்கக்கோரி முதல்–அமைச்சர், சபாநாயகர், கவர்னர், தலைமை செயலாளர், சட்டமன்ற செயலாளர் ஆகியோரை சந்தித்து நீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்து வருகிறோம். எங்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும்.

சபாநாயகர் வைத்திலிங்கம் வருகிற 16–ந் தேதி எங்களை சட்டசபைக்குள் அனுமதிப்பார் என்று நம்புகிறோம். அனுமதிக்காத பட்சத்தில் வருகிற 19–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போது சபாநாயகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழங்க தொடருவோம். மத்திய அரசுடன் புதுவை அரசு இணைக்கமாக செயல்பட வேண்டும். அதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இதனை புதுவை அரசு பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story