20-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்: தர்மபுரி மாவட்டத்தில் 4,500 லாரிகள் ஓடாது


20-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்: தர்மபுரி மாவட்டத்தில் 4,500 லாரிகள் ஓடாது
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

20-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 4,500 லாரிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வருகிற 20-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் 4500 லாரிகள் ஓடாது என்று சம்மேளன மாநில துணை தலைவர் நாட்டான் மாது கூறினார்.

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 20-ந்தேதி (வெள்ளிக் கிழமை) காலை 6 மணி முதல் அகில இந்திய அளவிலான லாரிகள் வேலைநிறுத்தம் போராட்டம் தொடங்குகிறது. 3-ம் நபர் காப்பீடுக்கான தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரி விதிப்பை குறைக்க வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி பகுதி வழியாக செல்லும் லாரிகளில் வேலைநிறுத்தம் தொடர்பான துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது. இதேபோல் தர்மபுரி ரயில்வே குட்செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளிலும் வேலைநிறுத்தம் குறித்த துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்துணை தலைவர் நாட்டான் மாது தலைமையில், மாவட்ட செயலாளர் சையத்அப்சல், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் தங்கவேல், நரசிம்மன், எம்.அன்பழகன் ஜெமினி, ராதா ஆகியோர் லாரிகளில் துண்டு பிரசுரங்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக நாட்டான்மாது கூறுகையில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் வருகிற 20-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குகிறது. இதனால் அன்று முதல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 4,500 லாரிகள் மற்றும் மினி சரக்கு வாகனங்கள் ஓடாது. இதன்காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள், சரக்குகளின் போக்குவரத்து பாதிக்கும். இதனால் ஒரு நாளில் தலா ரூ.8 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

Next Story