கடலில் விசைப்படகு மூழ்கியது முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்


கடலில் விசைப்படகு மூழ்கியது முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 16 July 2018 4:15 AM IST (Updated: 16 July 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

கடலில் விசைப்படகு மூழ்கியதால் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பழையாறு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினமும் 300 விசைப்படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள், கடல் முகத்துவாரத்தை கடந்து தினமும் கடலுக்கு செல்ல வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முகத்துவாரம் மீன்வளத்துறை மூலம் ஆழப்படுத்தப்பட்டது. இதனால் படகுகள் எளிதில் கடலுக்குள் சென்று வந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் முகத்துவாரம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குள் விசைப்படகுகள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்துவிட்டு பழையாறு சுனாமி நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் ரூ.20லட்சம் மதிப்பிலான விசைப்படகு துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த போது முகத்துவாரத்தில் உள்ள மண்ணில் சிக்கி விசைப்படகின் அடிப்பாகத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடல் நீர் விசைப்படகுக்குள் புகுந்து கடலில் படகு முழ்கியது.

அப்போது படகில் இருந்த 5 பேர் அக்கம்பக்கத்தில் உள்ள படகு உதவியால் கரையேறினர். இந்தநிலையில் முழ்கிய படகை மீட்கும் பணியில் நேற்று விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீன்பிடித்தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பழையாறு மீனவர்கள் 5 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்களின் விசைப்படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் அருட்செழியன் கூறியதாவது:-

நாகை மாவட்டம் பழையாறு முகத்துவாரம் 2 மாதத்துக்கு முன்பு பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப் பட்டது. ஆனால் தற்போது தூர்வாரிய இடம் கடல் சீற்றத்தால் மண்ணால் மூடிவிட்டது. அடிக்கடி முகத்துவாரத்தை தற்காலிகமாக தூர்வாரி வருவதால் அடுத்த சில மாதங்களில் மண்ணால் முகத்துவாரம் மூடப்பட்டுவிடுகிறது. எனவே, நாகப்பட்டினம் ,காரைக்கால், கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகத்தில் நிரந்தரமாக மணல் குவியாமல் இருக்க கற்களை கொட்டி நிரந்தர தடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல பழையாறு மீன்பிடி துறைமுகத்திலும் முகத்துவாரத்தில் கருங்கற்களை கொட்டி படகுகள் எளிதாக சென்று வரும் வகையில் வழி ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது மூழ்கிய விசைப்படகை இனி எந்த விதத்திலும் பயன்படுத்த இயலாது. எனவே பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story