சமயபுரம் மாரியம்மன்கோவில் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்


சமயபுரம் மாரியம்மன்கோவில் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்
x
தினத்தந்தி 17 July 2018 4:15 AM IST (Updated: 16 July 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) பா.மோகன் கூறினார்.

 

ஒரத்தநாடு,

திருச்சி சமயபுரம் மாரியம்மன்கோவில் யானை மசினிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் சோர்வடைந்த இந்த யானையால் உணவை உட்கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் வழிகாட்டுதல் படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவகல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் திருச்சிக்கு சென்று மசினி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் யானையின் முன் கால் மற்றும் அடி வயிற்று பகுதிகளில் ஏற்பட்ட வீக்கம் குறையவில்லை. இதனால் இந்த யானை கடந்த 13–ந் தேதி ஒரத்தநாடு கால்நடை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பா.மோகன் தலைமையில் மருத்துவர்கள் பழனிச்சாமி, செல்வராஜ், வீரச்செல்வம், செந்தில்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) பா.மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:

சமயபுரம் கோவில் யானை ஒரத்தநாட்டிற்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. இங்குள்ள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை கால்நடை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

தற்போது யானையின் கால் பகுதி வீக்கம் குறைய தொடங்கி உள்ளது. மேலும் யானை புல், தண்ணீர் உள்ளிட்ட உணவுகளை நன்கு உட்கொள்கிறது. மேலும் அருகம்புல்லை விரும்பி அதிகம் சாப்பிடுகிறது.

சிகிச்சைக்கு வந்த முதல் நாளில் யானை 10 மீட்டர் தூரம் மட்டுமே நடைபயிற்சியில் ஈடுபட்டது. இந்தநிலையில் நேற்று முதல் (அதாவது இன்று) 100 மீட்டர் தூரம் வரை நடந்து சென்றது. யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் யானை இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடும். அதன் பிறகு இங்கு இருந்து யானையை அனுப்பி வைப்போம்.

இவ்வாறு இவர் கூறினார்.

யானை மசினி முழுமையாக குணமடைந்தவுடன் சில தினங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story