மணக்குடி இரும்பு நடைபாதை பாலத்தை காங்கிரீட்டாக மாற்ற வேண்டும் மீன் தொழிலாளர்கள் மனு


மணக்குடி இரும்பு நடைபாதை பாலத்தை காங்கிரீட்டாக மாற்ற வேண்டும் மீன் தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 6:27 PM GMT)

மணக்குடி இரும்பு நடைபாதை பாலத்தை காங்கிரீட் பாலமாக மாற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க கவுரவ தலைவர் அந்தோணி, தலைவர் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் அந்தோணி, பொருளாளர் டிக்கார்தூஸ் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

மணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலமணக்குடி– கீழமணக்குடி இடையே இரும்பு நடைபாதை பாலம் அமைந்துள்ளது. சுற்றுலா வரும் பயணிகள், மணக்குடி படகு தளத்துக்கு வந்து செல்பவர்கள் நடந்து செல்ல ஏதுவாக இரும்பு நடைபாதை பாலத்தை காங்கிரீட் பாலமாக மாற்றிட வேண்டும். இதற்கு நெடுஞ்சாலைத்துறை பொறியாளரை வைத்து மதிப்பீடு செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.

 மணக்குடி ஊராட்சி மன்றம் அருகில் அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கையும், கீழமணக்குடி சந்திப்பில் கழற்றி போடப்பட்டுள்ள மின்விளக்கையும், மணக்குடி மேம்பால கோபுர மின்விளக்குகளையும் எரியச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழமணக்குடியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள காலனியில் அமைந்துள்ள ரோடு சுமார் 2500 மீட்டர் ஆகும். 10 தெருக்களாக அமைந்துள்ளது. இந்த சாலை அமைத்து 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த ரோடு முழுவதும் பழுதடைந்து, குண்டும்– குழியுமாக கிடப்பதால் கீழமணக்குடி மக்கள் நடக்க முடியாத நிலையில் உள்ளது.

எனவே இந்த சாலையை சீரமைத்து தருமாறும், இதைப்போன்று மணக்குடி கடற்கரை சாலையில் அந்தோணியார் குருசடி பக்கம் மழைநீர் அதிகமாக தேங்குவதால், அந்த தண்ணீர் வடிந்து ஓடுவதற்கு தகுந்தாற்போல் சாலையை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில் மணக்குடி பகுதியை சேர்ந்த ததேயு, ராதா, பிரெடி, அந்தோணிபிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Next Story