8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு: விவசாயிகளின் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்


8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு: விவசாயிகளின் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 19 July 2018 10:15 PM GMT (Updated: 19 July 2018 9:39 PM GMT)

8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் அரூரில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமையில் நடந்தது.

அரூர்,

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், நிலங்களில் கருப்புக்கொடி ஏற்றினர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் நிலங்கள் அளவீடு செய்யும் பணி முடிந்து ஒவ்வொருவரின் நிலங்களில் உள்ள மரங்கள், வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இந்தநிலையில் விவசாய நிலம், வீடுகள் கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்து அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சேபனை மனுக்கள் கொடுத்தனர். இந்த மனு தொடர்பாக அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஆகஸ்ட் 2-ந்தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளிடம் மனு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் நிலம் எடுப்பு சிறப்பு அதிகாரிகள் முகுந்தன், பாரிவேல் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்து கேட்டனர். இதில் தாம்பல் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் அரூர் உதவி கலெக்டர் டெய்சிகுமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story