சோழவந்தான் பகுதியில் வைகையாற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளை
சோழவந்தான் பகுதியில் உள்ள வைகையாற்றில் அதிகரிக்கும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்,
சோழவந்தான் கச்சிராயிருப்பு பிரிவு, தச்சம்பத்து, திருவேடகம், தேனூர், மேலக்கால், தாராப்பட்டி பிரிவு, கொடிமங்கலம் கீழமாத்தூர், துவரிமான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, சித்தாதிபுரம், கருப்பட்டி, இரும்பாடி ஆகிய கிராமங்களில் வைகையாற்றில் நூதன முறையில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. மணல் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள், மினி வேன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மணல் கொள்ளையர்கள் நள்ளிரவில் மணலை கொள்ளையடித்து ரகசியமான இடத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, குருவித்துறை அருகே மணல் கொள்ளையர்கள் சுமார் 11 லாரிகளுடன் மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது காடுபட்டி போலீசார் சுற்றி வளைத்து லாரிகளை கைப்பற்றினர். இதற்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரம், கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆண்களாக தொடர்ந்து இப்பகுதிகளில் அதிக அளவு மணல் கொள்ளை நடந்து வருவதால் இப்பகுதி நிலத்தடி நீர் பல மடங்கு கீழே சென்று விட்டது. இதனால் இந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே தற்போது மணல் குவாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் மேலும் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று பொதுமக்கள் அரசின் மீது குறை கூறி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் கொள்ளை சம்பவத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.