இலங்கையில் பிடிபட்ட படகுகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
இலங்கையில் பிடிபட்ட படகுகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் நேற்று அனைத்து மாவட்ட மீனவர் சங்க கூட்டம் என்.ஜே.போஸ் தலைமையில் நடந்தது. இதில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு, நாகபட்டினம் செல்வமணி, ராமநாதன், புதுக்கோட்டை பஞ்சபாண்டவர், மண்டபம் சதீஷ் உள்பட ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் ஆகியவற்றை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 171 படகுகளும், புதுச்சேரியை சேர்ந்த 13 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளன. இதில் ஏற்கனவே முழுமையாக சேதமடைந்த 18 படகுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையில் விடுவிக்கப்படாமல் உள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்–அமைச்சர், மீன்துறை அமைச்சர் ஆகியோரை மீனவ சங்க பிரமுகர்கள் சந்தித்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் விடுவிக்க கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மறுநாள் அந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு மத்திய–மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதுதவிர இலங்கை கடற்படை தொல்லையில்லாமல் மீன்பிடிக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.