சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் சென்ற லாரி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் சென்ற லாரி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 July 2018 3:30 AM IST (Updated: 21 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தையொட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகளை ஏற்றிச்சென்ற லாரியை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உப்பிலியபுரம்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதன்படி திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரிகளை இயக்கவில்லை. மேலும் நேற்று காலை அவர்கள் உப்பிலியபுரம் அண்ணா சிலை அருகே பந்தல் அமைத்து, கோரிக்கைகள் குறித்த துண்டு, பிரசுரங்களுடன் நின்றனர்.

அப்போது துறையூர்- தம்மம்பட்டி செல்லும் சாலையிலும், துறையூர்- பச்சைமலை செல்லும் சாலையிலும் வந்த லாரிகளை அவர்கள் மறித்து நிறுத்தி, வேலை நிறுத்தம் குறித்தும், டீசல் விலை உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு உள்ளிட்டவை தொடர்பான சிறிய துண்டு பிரசுரங்களை லாரிகளின் கண்ணாடியில் ஒட்டினார்கள். பின்னர் அந்த லாரிகளை சாலையோரத்தில் நிறுத்த செய்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக பச்சமலையில் இருந்து ஒரு லாரி ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தது. லாரி உரிமையாளர்கள், அந்த லாரியை மறித்து நிறுத்தி கண்ணாடியில் துண்டு பிரசுரத்தை ஒட்டி சாலை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.

அதற்கு லாரியில் இருந்தவர்கள், பச்சமலையில் சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான சின்ன மங்கலம், பெரியமங்கலம், பெரியநாகூர் உள்பட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் என்பதும், அவர்கள் நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் நரசிங்கபுரத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த வழியாக செல்வதாகவும், கூறினார்கள்.

இருப்பினும் அந்த லாரி அங்கிருந்து செல்ல லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அனுமதிக்கவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், உடனடியாக அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைத்து லாரிகளையும் அங்கிருந்து செல்ல, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story