பொள்ளாச்சியில் போலீசாருக்கு கத்திக்குத்து:3 பேர் கைது


பொள்ளாச்சியில் போலீசாருக்கு கத்திக்குத்து:3 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2018 4:45 AM IST (Updated: 21 July 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை கத்தியால் குத்திய இலங்கை அகதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி,

ஈரோடு மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, சப்–இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு மோகனசுந்தரம், போலீஸ்காரர் பழனிராஜ் ஆகியோர் மாவோயிஸ்டுகள் போலி சிம் கார்டுகள் வாங்கிய வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பொள்ளாச்சி கோர்ட்டுக்கு வந்தனர். பின்னர் வேலை முடிந்ததும் கோவை செல்வதற்காக பொள்ளாச்சி புதிய பஸ்நிலைய சுரங்கப்பாதை வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது சுரங்க பாதை படிக்கட்டின் நடுவில் நின்று பேசிக்கொண்டு இருந்த 4 பேரை அவர்கள் கண்டித்தனர். இதில், ஆத்திரம் அடைந்த கோவை போளுவாம்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த விஜய் என்கிற விஜயராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, சப்–இன்ஸ்பெக்டர் ரூபன், ஏட்டு மோகனசுந்தரம் ஆகியோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 3 பேரும் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம், தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், ரத்தினகுமார் ஆகியோர் போளுவாம்பட்டி விஜய், பொள்ளாச்சி வெங்கடேச காலனி ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் (25), பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (24) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் மீது இரட்டை கொலை வழக்கும், பிரேம்குமார் மீது கொலை வழக்கும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story