பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: பதற்றமும் பரபரப்பும்


பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: பதற்றமும் பரபரப்பும்
x
தினத்தந்தி 21 July 2018 1:48 PM IST (Updated: 21 July 2018 1:48 PM IST)
t-max-icont-min-icon

இதோ... பாகிஸ்தானில் பொதுத் தேர்தல், இம்மாதம் 25-ந்தேதி நடைபெற இருக்கிறது.

பெனாசிர் பூட்டோ, ஜெனரல் முஷரப், நவாஸ் ஷெரீப் போன்று, இந்தியாவில் நன்கு அறியப்பட்ட தலைவர்கள், இப்போது தேர்தல் களத்தில் இல்லை.

ஏற்கனவே பெனாசிர் சுட்டுக் கொல்லப்பட்டார்; 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முஷரப், அரசியல் படுகொலைகள் நிகழ்த்தியதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். தற்போது லண்டன் மாநகரில் வசித்து வரும் முஷரப், பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால், ‘காணாமல் போனவர்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதே போலவே, நவாஸ் ஷெரீப் மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு, என்.ஏ.பி. என்கிற தேசிய கண்காணிப்பு அமைப்பு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்து விட்டது.

இதனை மீறி, லண்டனில் இருந்து தனது மகள் மரியம் நவாசுடன், இம்மாதம் 13-ந்தேதி அன்று, பாகிஸ்தானுக்கு வந்தார் நவாஸ் ஷெரீப். தந்தையும் மகளும், லாகூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகவே இந்தப் பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தவிர்த்து, நாம் அறிந்த பிரபலமான தலைவர்கள் யாரும் களத்தில் இல்லை. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில், அவரின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் களம் காண்கிறார்.

பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில், ஜனநாயக நடைமுறைகள் எல்லாம், காகிதத்தில் மட்டுமே உண்டு. பாகிஸ்தான் ராணுவம், ‘ஐ.எஸ்.ஐ.’ எனப்படும் உளவுத்துறை, மத அடிப்படை வாதிகள் மற்றும் பாகிஸ்தானின் நீதித் துறை ஆகியனவும் அரசியல் களத்தில் ஆழமாக ஊடுருவி இருக்கின்றன. இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ, ஆடுகிற ஆட்டங்கள்தான், பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பதற்றத்தைக் கூட்டுகிறது.

இம்ரான்கான் ஆட்சிக்கு வருவதையே பாகிஸ்தான் ராணுவம் விரும்புகிறது. மத அடிப்படை வாதிகளும் கூட, அவர் பக்கமே நிற்கின்றனர். இதனால், பயங்கரவாதத்துக்கு எதிராக இம்ரான்கான், வாயே திறப்பதில்லை.

ஆனால் ஊழல் குற்றச்சாட்டின் மீது கைதாகி உள்ள நவாஸ் ஷெரீப், இன்னமும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவே இருக்கிறார். நாடு முழுவதுமே அவருக்கு, பரவலாக நல்ல ஆதரவு உள்ளதாகவே தெரிகிறது.

பாகிஸ்தான் ஊடகங்கள் பொதுவாக, நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாகவே உள்ளன. காரணம், மிதவாதத் தலைவர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால், பிரிவினைவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உதவி செய்வதாக ஆகி விடும் என்று அஞ்சுகின்றன.

இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதால், பாகிஸ்தான் ராணுவம் தனக்கு எதிராக இருப்பதாகக் கூறுகிறார், நவாஸ். இது மிகவும் கவனிக்கத் தக்க வேண்டிய ஒன்று. இதுவரை பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்புதான் தேர்தல் களத்தில் எல்லோரும் கையாண்ட யுக்தி. முதல்முறையாக, இந்திய எதிர்ப்பு இல்லாத தேர்தலாக இது அமைகிறது. இது வரவேற்கத் தகுந்த மாற்றம்.

இந்திய எதிர்ப்பு மங்கி வருகிறது; சீனாவின் மீது அவநம்பிக்கை வளர்ந்து வருகிறது; ராணுவத்தின் மீதிருந்த அச்சமும் பிரமிப்பு கலந்த நம்பிக்கையும் தகர்ந்து வருகிறது.

பயங்கரவாதக் குழுவான ‘ஜமாத்உத்தவா’ அமைப்பு, மில்லி முஸ்லிம் லீக் என்கிற பெயரில், பதிவு பெறாத அரசியல் கட்சியாகக் களத்தில் இறங்கி உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர் ஹபிஸ் சயீத். இவரின் மகன், மருமகன் உள்பட சுமார் 160 பயங்கரவாதிகள் தேர்தலில் போட்டி இடுகிறார்கள்.

ஆமாம்.... இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்...?

மேற்கு, மத்திய பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி அதிக அளவில் வெற்றி பெறலாம். கைபர் பக்துன்வா பகுதியில், இம்ரானுக்கு செல்வாக்கு கூடுதலாக இருக்கலாம். பலுசிஸ்தான் பகுதியில், பழங்குடிகளின் அமைப்புகள் வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம்.

பாகிஸ்தானில் 8-ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவாகப் படித்தவர்கள், 58 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களைக் குறி வைத்தே, ராணுவமும், மத அடிப்படைவாதிகளும் காய் நகர்த்துகிறார்கள். மிகவும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிற இவர்களின் வாக்குகள்தான் இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்றன.

ராணுவம், மத அடிப்படைவாதிகளின் செல்லப் பிள்ளையாகவும் இம்ரான்கான் இருக்கிறார். ஆனால் அவருக்கு, அரசு நிர்வாகத்தில் சற்றும் அனுபவம் இல்லை. இதனால் இம்ரானை ஆதரிப்பதில், பொது வாக்காளர் மத்தியில் தயக்கம் இருக்கிறது. கிரிக்கெட் புகழ், இம்ரானைக் கரை சேர்க்கப் போதுமானதாக இல்லை.

பாகிஸ்தான் மக்கள் கட்சி பெறுகிற வாக்குகளும், வெற்றி அடைகிற தொகுதிகளும், ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கலாம். இது போலவேதான், பலுசிஸ்தான் பகுதி பழங்குடியினர் கட்சியின் வாக்குகளும், வெற்றிகளும்.

மில்லி முஸ்லிம் லீக் போன்று திடீர் என்று முளைத்த தீவிர மதச் சார்பு கட்சிகள் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை. இம்ரான்கான் காரணமாக, போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது.

இப்போதுள்ள நிலவரப்படி, நவாஸ் ஷெரீப்பின் கட்சி, நூலிழையில் வெற்றிக் கோட்டை எட்டி விடும் என்றுதான் தோன்றுகிறது.

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

Next Story