தொடர் மழையால் 13-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை


தொடர் மழையால் 13-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
தினத்தந்தி 22 July 2018 3:15 AM IST (Updated: 22 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் 13-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோட்டூர்,

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குரங்கு நீர்வீழ்ச்சி. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

வார நாட்களில் சுமார் 2 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள். குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு ஒரு நபருக்கு 30 ரூபாய் வனத்துறையினரால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள வால்பாறை, சோலையார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ஒரு மாத காலமாக நீடித்து உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் கடந்த 9-ந் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் மழைநீரில் கற்கள், மரக்கட்டைகள் விழுகின் றன. நீரின் அளவு அதிகரித்து கொண்டே போவதால் அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் வனத்துறையினர் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்தனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையின் தாக்கம் குறையாததால் குரங்கு நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து 13-வது நாளான நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வனத்துறைக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story