காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை தேவேகவுடா பேட்டி


காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 21 July 2018 11:00 PM GMT (Updated: 21 July 2018 9:36 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

தேவேகவுடா ஆலோசனை

பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று தேவேகவுடா ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், முதல்–மந்திரியாக குமாரசாமி இருப்பதால், அவர் வகித்து வரும் மாநில தலைவர் பதவிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாகவும் தேவேகவுடா ஆலோசனை நடத்தினார். மேலும் கட்சிக்கு நிர்வாகிகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் பதவியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று தேவேகவுடாவிடம் நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது. புதிய தலைவராக மது பங்காரப்பாவை நியமிக்கலாம் என்றும் சிலர் கருத்து கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பேச்சுவார்த்தை நடைபெறவில்லை

குமாரசாமி முதல்–மந்திரியாக இருப்பதால் மாநில தலைவர் பதவி மற்றும் நிர்வாகிகளை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்க புதிதாக குழு அமைக்கப்பட இருக்கிறது. அந்த குழுவுடன் கலந்து ஆலோசித்து புதிய தலைவர் யார்? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போது இருந்தே தயாராகும்படி கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.

தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் நீடிக்கும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து எந்த விதமான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story