சிரூர் மடாதிபதி மர்ம மரண விவகாரம்: சகோதரர், பெண் உதவியாளரிடம் போலீஸ் விசாரணை


சிரூர் மடாதிபதி மர்ம மரண விவகாரம்: சகோதரர், பெண் உதவியாளரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2018 4:00 AM IST (Updated: 22 July 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

சிரூர் மடாதிபதி மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக அவருடைய சகோதரர் மற்றும் பெண் உதவியாளரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

மங்களூரு, 

சிரூர் மடாதிபதி மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக அவருடைய சகோதரர் மற்றும் பெண் உதவியாளரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லட்சுமிவர தீர்த்த சுவாமி மரணம்

உடுப்பியில் சிரூர் மடம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த மடத்தின் 30–வது மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவர தீர்த்த சுவாமி. 54 வயதான லட்சுமிவர தீர்த்த சுவாமி கடந்த 18–ந்தேதி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மடத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மறுநாள் அதாவது 19–ந்தேதி காலை 5 மணி அளவில் லட்சுமிவர தீர்த்த சுவாமி மரணமடைந்தார்.

இந்த நிலையில், லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் உணவில் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி மடாதிபதியின் தம்பி லதாவியா ஆச்சார்யா இரியடுக்கா போலீசில் பரபரப்பு புகார் செய்தார். இதற்கிடையே சிரூர் மடாதிபதி உணவில் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், லடசுமிவர தீர்த்த சுவாமி பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்கவில்லை என்றும் பெஜாவர் மடாதிபதி பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

3 மடாதிபதிகளிடம் விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி மடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், கனியூர், சோடே, அத்மாரு மடங்களை சேர்ந்த மடாதிபதிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி ரகசிய விசாரணை நடத்தினார். அப்போது சில முக்கிய தகவல்கள் அவருக்கு கிடைத்ததாக தெரிகிறது. மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அருண் சக்கரவர்த்தியும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சிரூர் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மர்ம மரண விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. அவருடைய மரணத்தின் பின்னணி என்ன? என்பது இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. இது கொலையா? அல்லது சாதாரண இறப்பா? என்பது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சகோதரர், பெண் உதவியாளர்

இதுதொடர்பாக இரியடுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சிரூர் மடாதிபதி மரணம் தொடர்பாக நேற்று அவருடைய சகோதரர் லதாவியா ஆச்சார்யாவிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அவருடைய உதவியாளரான ரம்யா ஷெட்டி என்பவரை பிடித்தும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சிரூர் மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், சில பெண்களுடனும் தொடர்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் மடாதிபதியிடம் ரம்யா ஷெட்டி கடந்த 3 ஆண்டுகளாக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். மடத்தின் கணக்கு, வழக்குகளை 3 ஆண்டுகளாக ரம்யா ஷெட்டி தான் பார்த்து வந்துள்ளார். மடத்துக்கு சொந்தமான சொத்துகளை ரம்யா ஷெட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிரூர் மடாதிபதியின் தங்க நகைகளையும் அவர் அணிந்து இருப்பது போன்ற படங்களும் சமூக வலைதளங்களில் பரவியதால், அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

நிலப்பிரச்சினை

இதற்கிடையே உடுப்பியை சேர்ந்த மறைந்த தொழில் அதிபர் பாஸ்கர்ஷெட்டியின் மனைவி ராஜேஸ்வரி ஷெட்டியின் உறவினர்களுக்கும், மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமிக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதனால் அந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மடத்தின் சொத்துகளை அபகரிக்க பெண் உதவியாளர் ரம்யா ஷெட்டி, மடாதிபதிக்கு உணவில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொன்றாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மடாதிபதியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்துள்ளனர். அந்த அறிக்கை வந்த பிறகு, போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்துவார்கள் என தெரிகிறது. மடாதிபதி லட்சுமிவர தீர்த்த சுவாமியின் மர்ம மரண விவகாரத்தில் தினம், தினம் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும், அவருடைய மரணம் குறித்து சரியான காரணம் இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.


Next Story