காளையார்கோவில் அருகே மூதாட்டி கொலையில் பெண் கைது
காளையார்கோவில் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
காளையார்கோவில்,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள காஞ்சிரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து மனைவி நாச்சியம்மாள்(வயது 65). இவருடைய மகன் சுப்பிரமணியன், மருமகள் வளர்மதி. சுப்பிரமணியன் கோவையில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் நாச்சியம்மாளும், மருமகள் வளர்மதியும் ஒன்றாக வசித்து வந்தனர். நாச்சியம்மாளுக்கும், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று நாச்சியம்மாள் தனது இடத்தை சுற்றி வேலி அமைத்துள்ளார். இதற்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்து மகன் கிருஷ்ணன், தோகப்பன் மனைவி மீனாட்சி, மாணிக்கம் மனைவி நாகவள்ளி, சந்திரன் மனைவி லட்சுமி, கிருஷ்ணன் மனைவி காளியம்மாள் ஆகிய 5 பேர் சேர்ந்து நாச்சியம்மாளை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாச்சியம்மாள் இறந்துபோனார்.
இதுகுறித்து காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் வளர்மதி புகார் அளித்தார். அதன்பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து மீனாட்சியை கைதுசெய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கிருஷ்ணன், நாகவள்ளி, லட்சுமி, காளியம்மாள் ஆகிய 4 பேரை தேடிவருகின்றனர்.