தியாகதுருகம் அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்த மினிலாரி வயலுக்குள் பாய்ந்தது


தியாகதுருகம் அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்த மினிலாரி வயலுக்குள் பாய்ந்தது
x
தினத்தந்தி 24 July 2018 3:15 AM IST (Updated: 24 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே மதுபாட்டில்கள் கடத்தி வந்த மினிலாரியை போலீஸ் ஏட்டு விரட்டிச்சென்றதால் வயலுக்குள் பாய்ந்தது.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் போலீஸ் ஏட்டு கண்ணன் நேற்று அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அண்ணாநகர் அருகே வேகமாக வந்த மினிலாரியை ஏட்டு கண்ணன் வழிமறித்தார். ஆனால் டிரைவர் மினிலாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இதையடுத்து ஏட்டு கண்ணன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அந்த மினிலாரியை தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றார்.

இதற்கிடையே அந்த மினிலாரி கலையநல்லூர் தனியார் சர்க்கரை ஆலை வழியாக சென்றுகொண்டிருந்தது. கலையநல்லூர் காட்டுக்கொட்டாய் அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினிலாரி, சாலையோரம் இருந்த கரும்பு வயலுக்குள் பாய்ந்தது. உடனே டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் இந்த சம்பவம் பற்றி அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மினிலாரியை சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டிகளில் 2 ஆயிரத்து 790 வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மினிலாரியை ஓட்டி வந்தது கலையநல்லூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்த ஏழுமலை(வயது 45) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விபத்தில் சிக்கிய மினிலாரி, ரூ.2½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் ஏழுமலையை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story