சிதம்பரத்தில் கோவில் திருவிழாவில் பரபரப்பு: முன்விரோத தகராறில் கொத்தனார் குத்திக்கொலை, 3 பேர் கைது
சிதம்பரத்தில் கோவில் திருவிழாவின் போது முன்விரோத தகராறில் கொத்தனார் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வினோத்குமார் (வயது 26), கொத்தனார். இவருடைய மனைவி மஞ்சுளா (23). இவர்களது மகன் விமல் (3).
வினோத்குமாருக்கும், அதே தெருவை சேர்ந்த ராஜா மகன் தினகரன் (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் தெருவில் அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் வினோத்குமாரின் வீட்டின் அருகே உள்ள கன்னிகோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது. இதையொட்டி சாமி வீதிஉலாவை காண வீட்டின் அருகே தெருவில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார்த்தி, மணி (21), சுரேஷ் (32) ஆகியோர் அங்கு வந்தனர். சிறிதுநேரத்தில் தினகரனுக்கும், வினோத்குமாருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இது முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த தினகரன், கார்த்தி, மணி, சுரேஷ் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ரத்தவெள்ளத்தில் வினோத்குமார் சரிந்து கீழே விழுந்தார். இதனால் திருவிழாவை காணவந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வினோத்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிந்து தினகரன், மணி, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கார்த்தியை தேடிவருகின்றனர்.
கோவில் திருவிழாவின் போது கொத்தனார் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.