பெண்ணாடம் அருகே தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் கதவை உடைத்து 2 மாணவர்கள் உயிருடன் மீட்பு


பெண்ணாடம் அருகே தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் கதவை உடைத்து 2 மாணவர்கள் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 25 July 2018 3:30 AM IST (Updated: 25 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. தீயில் சிக்கிய 2 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெ.பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 65). இவருடைய மகன்கள் சுப்பிரமணியன்(48), சிவக்குமார்(45), வெங்கடேசன்(38). முத்துசாமி மற்றும் அவரது மகன்கள் 3 பேரும் அடுத்தடுத்து உள்ள கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் சுப்பிரமணியனின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயின் வெப்பத்தை உணர்ந்த சுப்பிரமணியன் திடுக்கிட்டு எழுந்தார்.

அப்போது வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன், அங்கு தூங்கிக்கொண்டிருந்த மனைவி, மகள் மற்றும் மகன்களை எழுப்பினார். உடனே சுப்பிரமணியன், அவரது மனைவி, மகள் மட்டும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

அந்த சமயத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி முன்பக்க வாசலில் விழுந்தது. இதனால் சுப்பிரமணியனின் மகன்கள் சோமசுந்தரம்(17), கோபி(11) ஆகியோரால் வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.

இதற்கிடையில் அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். வீட்டில் 2 பேர் சிக்கிக்கொண்டு தவித்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பக்கத்து வீடுகளில் வசித்து வரும் கந்தன் மகன் மகாலிங்கம்(50), மணிவேல் மனைவி வாழம்பாள்(25) ஆகியோர் வீட்டின் பின்பக்கமாக சென்று, அங்குள்ள கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்று, சோமசுந்தரம், கோபி ஆகிய 2 பேரையும் உயிருடன் மீட்டனர்.

இதனிடையே பலத்த காற்று வீசியதால் அருகில் வசித்து வந்த சிவக்குமார், வெங்கடேசன், முத்துசாமி ஆகியோரது கூரை வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. உடனே கிராம மக்கள் தங்களது வீடுகளில் இருந்த தண்ணீரை குடங்களில் கொண்டு வந்து, தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இது பற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இந்த தீ விபத்தில் சுப்பிரமணியன் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம், முத்துசாமி வீட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் சாம்பலானது. சுப்பிரமணியன் வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் உருகியது. மேலும் 4 வீடுகளில் இருந்த மொத்தம் 105 நெல் மூட்டைகள், வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட சோமசுந்தரம், அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பும், கோபி தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சுப்பிரமணியனின் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் அவரது மகன்கள் சோமசுந்தரம், கோபி ஆகியோர் தவித்தனர். காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். தீ விபத்து நிகழ்ந்த வீட்டின் முன்பு ஏராளமானோர் திரண்டனர். ஆனால் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. அந்தசமயத்தில்தான் பக்கத்து வீடுகளில் வசித்து வரும் மகாலிங்கம், வாழம்பாள் ஆகியோர் சுப்பிரமணியனின் வீட்டின் பின்பக்கம் சென்றனர். அவர்கள் அச்சமின்றி வீட்டின் பின்பக்கமுள்ள கதவை உடைத்து, வீட்டுக்குள் சென்று 2 பேரையும் மீட்டனர். அப்போது மகாலிங்கத்துக்கும், வாழம்பாளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தங்களுடைய உயிரை பற்றி நினைக்காமல் தைரியமாக வீட்டுக்குள் சென்று 2 மாணவர்களை மீட்ட மகாலிங்கத்தையும், வாழம்பாளையும் கிராம மக்கள் பாராட்டினர்.


Next Story