சோதனைச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு: மணல் கடத்தலை தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி ஆய்வு


சோதனைச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு: மணல் கடத்தலை தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி ஆய்வு
x
தினத்தந்தி 25 July 2018 5:15 AM IST (Updated: 25 July 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

சோரியாங்குப்பத்தில் சோதனைச்சாவடிக்கு சென்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா இரவு நேரத்தில் அதிரடியாக ஆய்வு செய்தார்.

பாகூர்,

தடையை மீறி தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க நேற்று முதல் சோரியாங்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த சோதனைச்சாவடிகளுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா இரவு நேரத்தில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார்.

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள தென் பெண்ணை ஆற்றிலும், வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றிலும் மணல் அள்ளுவதற்கு தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு வருவாய் துறையினருக்கும் புகார்கள் சென்றன. மணல் கடத்தலை தடுக்க போலீசார், வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் மணல் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் மணல் கடத்தலை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதுச்சேரி மாநில போலீஸ் சூப்பிரண்டு சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்க போலீஸ் தரப்பில் மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா நேற்று இரவு 9 மணி அளவில் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு சென்று தி டீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் போலீஸ் நிலையங்களுக்கும் சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அந்தந்த போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் குற்றவாளிகளின் ஆவணங்களை பார்வையிட்டார். மேலும் போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைகளில் தடையை மீறி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் தடுக்க வேண்டும் என்றும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் மணல் கடத்தப்படுவதை தடுக்க மேலும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

மணல் கடத்தலை தடுக்கும் விதமாக பாகூர் அருகே சோரியாங்குப்பம்–குருவிநத்தம் ரோட்டிலும், சோரியாங்குப்பம்–பாகூர் ரோட்டிலும் இரண்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் அமர்ந்து மணல் கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறையினருக்கு உதவியாக நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஐ.ஆர்.பி.என் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு சோதனைச்சாவடிக்கும் தலா 5 போலீசார் வீதம் மொத்தம் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்த சோதனைச் சாவடிகளுக்கு நேற்று இரவு 10 மணி அளவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்பதா சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவின் ஆய்வின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன் (தவளக்குப்பம்), தன்வந்திரி (கிருமாம்பாக்கம்), ஜெயகுருநாதன் (பாகூர்), இளங்கோ (அரியாங்குப்பம்) மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story