சிமெண்டு சிலாப் உடைந்து ஆற்றில் தவறி விழுந்த ஊழியர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்


சிமெண்டு சிலாப் உடைந்து ஆற்றில் தவறி விழுந்த ஊழியர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பழைய காவிரி பாலத்தில் சீரமைப்பு பணியின் போது சிமெண்டு சிலாப் உடைந்து ஆற்றில் தவறி விழுந்த ஊழியரை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

திருச்சி,

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் திருச்சி காவிரி ஆற்றில் இரு புறமும் கரையை தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் ஒருவர் திருச்சி பழைய காவிரி பாலத்தில் நடைபாதையில் சிமெண்டு சிலாபில் இருந்த ஓட்டை வழியாக தவறி விழுந்து பலியானார்.

இந்த சம்பவத்தால் பழைய காவிரி பாலத்தில் சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. நடைபாதையில் சிமெண்டு சிலாப்புகள் மாற்றப்பட்டு கான்கிரீட் சிலாப்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழைய காவிரி பாலத்தில் சீரமைப்பு பணியின் போது சிமெண்டு சிலாப் உடைந்து ஊழியர் ஒருவர் ஆற்றில் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பெரம்பலூரை சேர்ந்த அர்ஜூனனின் மகன் அரவிந்த் (வயது22). நெடுஞ்சாலை துறையில் தற்காலிக ஊழியரான இவர் திருச்சி பழைய காவிரி பாலத்தில் சீரமைப்பு பணியின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். பாலத்தில் நேற்று பகல் 12 மணி அளவில் நடைபாதை சிமெண்டு சிலாப் ஒன்றின் மீது அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த சிலாப் திடீரென உடைந்தது. அதன் ஓட்டை வழியாக அரவிந்த் பாலத்தின் கீழே தண்ணீரில் விழுந்தார். ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் அவர் தத்தளித்தார்.

அப்போது ஆற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரையை அவர் இறுக பிடித்துக்கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கயிற்றை தூக்கி ஆற்றில் வீசினர். அரவிந்த் அந்த கயிற்றையும் பிடித்துக்கொண்டார்.

இதற்கிடையில் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கும், 108 ஆம்புலன்ஸ் வேனிற்கும் அங்குள்ள சக ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருணாகரன் மேற்பார்வையில் நிலைய அதிகாரி தனபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அத்துடன் 108 ஆம்புலன்ஸ் வேனும் வரவழைக்கப்பட்டது.

பிறகு வேனில் இருந்த ஸ்டிரெச்சரை தூக்கி ஆற்றில் ஆகாயத்தாமரை மீது வீசப்பட்டது. அதன்மீது அரவிந்த் ஏறி அமர்ந்துகொண்டார். மேலும் அவர் தண்ணீரில் மூழ்காமல் இருக்கும் வகையில் ரப்பர் டியூப் ஒன்றும் வீசப்பட்டது. அதனை அவர் பிடித்து உடலில் மாட்டிக்கொண்டார்.

இதைதொடர்ந்து பாலத்தின் மேல் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நின்று கொண்டு கயிறுகளை கீழே இறக்கினர். மேலும் தீயணைப்பு வீரர் ஒருவரும் கயிறு வழியாக ஆற்றில் இறங்கினார். பின்னர்ஆகாயத்தாமரை மேல் நின்று கொண்டிருந்த அரவிந்தின் வயிறு மற்றும் கால் பகுதியில் கயிறுகளை தீயணைப்பு வீரர் கட்டி விட்டார். அதன்பின் மேலே இருந்த தீயணைப்பு வீரர்கள் கயிற்றை பிடித்து இழுத்து அவரை மேலே தூக்கினர். பாலத்தின் தடுப்புச்சுவர் அருகில் வந்த போது தொடர்ந்து அவரை மேலே இழுக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சில நிமிடம் தவித்தனர்.

அப்போது அந்தரத்தில் அரவிந்த் தொங்கியபடி இருந்தார். அதன்பின் தொடர்ந்து வேகமாக அவரை பிடித்து இழுத்து மேலே தூக்கி பத்திரமாக உயிருடன் மீட்டனர். தொடர்ந்து அரவிந்த் மீது கட்டப்பட்டிருந்த கயிறுகளை தீயணைப்பு வீரர்கள் கழற்றிய பின் அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் முதல் உதவி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் விழுந்த அவர் உயிருடன் மீட்கப்பட்டதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். ஆற்றில் விழுந்த அவரை மீட்கப்படுவதை பார்வையிட பொதுமக்கள் பழைய காவிரி பாலத்தில் குவிந்தனர். ஆனால் அருகில் செல்ல பொதுமக்கள் யாரையும் போலீசார் விடவில்லை. இந்த சம்பவத்தால் பழைய காவிரி பாலத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story