ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண்


ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் ரவுடியின் கூட்டாளிகள் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 26 July 2018 5:30 AM IST (Updated: 26 July 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் தேடப்பட்ட 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 21–ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு பாபு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசியும், ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியும் பாபுவை படுகொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சஞ்சீவி ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாபுவுக்கும், அவரது உறவினரான ராமுவுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்துவந்தது. எனவே அவர் கூலிப்படையை அமைத்து பாபுவை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் குயிலாப்பாளையத்தில் ராஜ்குமார் மற்றும் தாதா மணிகண்டன் ஆகிய ரவுடி கும்பல்களுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலில் ராஜ்குமார் ஆதரவாளரான பாபு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் பிரபல ரவுடி தாதா மணிகண்டன் கூட்டாளிகள் பெரியமுதலியார் சாவடி பச்சையப்பன், அய்யப்பன், குயிலாப்பாளையம் மணிகண்டன் உள்பட 5–க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இவர்கள் மதுரை, விழுப்புரம் கோர்ட்டுகளில் சரணடையலாம் என்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கோர்ட்டுகளிலும் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் பச்சையப்பன், அய்யப்பன், மணிகண்டன் ஆகிய 3 பேர் சரணடைந்தனர். இவர்களை 15 நாள் சிறை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆரோவில் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story