வளையல்காரன்புதூர் குளத்தில் மதகுகளை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


வளையல்காரன்புதூர் குளத்தில் மதகுகளை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 July 2018 4:00 AM IST (Updated: 27 July 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

வளையல்காரன்புதூர் குளத்தில் உள்ள மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், ரங்கநாதபுரம் ஊராட்சி, வளையல்காரன்புதூரில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. இந்த குளத்திற்கு உப்பிடமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேடான பகுதிகளில் இருந்து மழை நீர் வந்து சேர்கிறது. இந்த குளத்தில் பாசன வாய்க்காலுக்காக மதகுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து வேண்டிய அளவு நீரை திறந்து அதன் மூலம் அருகில் உள்ள கே.பி.குளம், ஆர்.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் பயிர் செய்வது வழக்கம். இந்த குளம் நிரம்பினால் அதில் இருந்து பெறும் நீரின் மூலம் இப்பகுதி விவசாயிகள் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.

இந்நிலையில் இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் சீமைக்கருவேல மரங்களும், கருவேல மரங்களும் முளைத்து, வளர்ந்து நீர் தேங்கும் பரப்பை அடைத்து கொண்டு போதிய அளவு நீர் தேங்க வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த குளத்தில் இருந்து மண் எடுத்து கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் சிறிய பகுதியில் விவசாயிகள் மண் எடுத்து வந்தனர். ஆனால் அந்த காலக்கட்டத்தில் மழை பெய்ததால் தொடர்ந்து மண் எடுக்க முடியாத நிலையில் நீர் தேங்கியது.

இந்த நீரை கொண்டு விவசாயம் செய்ய அப்பகுதி விவசாயிகள் மதகை திறக்க முற்பட்ட போது அது திறக்க முடியாத நிலையில் செயல் இழந்து இருந்தது. இதையடுத்து மதகின் அடியில் உள்ள குமிழ் பகுதியை திறந்து விட்டனர். இதனால் தேவைக்கு அதிகமான நீர் வெளியேறி வீணாகி குளத்தின் நீர் தீர்ந்து விட்டது. கிராமங்களில் குடிநீர் தேவைக்கு செயல்படுத்தப்படும் நீர் ஆதாரங்களான ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நீரின்றி பொதுமக்களுக்கு போதிய அளவு நீர் வழங்க முடியாத நிலை ஒரு புறம். இந்த நிலையில் இவ்வாறு குளங்களில் தேங்கிய நீர் மதகு சரியில்லாமையால் வீணாகி போனது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே வரும் மழை காலத்திற்கு உள்ளாக விரைந்து குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி மதகை சரிசெய்து பாசன வாய்க்கால்களை அகலப்படுத்தினால், இந்த குளத்தின் நீர் ஆதாரத்தை கொண்டு ஆண்டு முழுவதும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்யவும், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரங்களில் போதிய அளவு நீர் கிடைக்கவும் வழி ஏற்படும். இதை அரசு செய்து தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story