சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேரிடம் விசாரணை


சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 30 July 2018 3:45 AM IST (Updated: 30 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளராகவும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், முதல் நிலை காண்டிரக்டராகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி காலை பிடாரி வடக்கு வீதியில் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி சேலம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு சீர்காழி தாலுகா, புதுத்துறை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு (34), புதுச்சேரி மேல்காத்தமங்களம் தேனி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகிய 3 பேர் சரணடைந்தனர். அவர்கள் 3 பேரையும் சீர்காழி போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த படுகொலை தொடர்பாக டி.ஐ.ஜி. தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த குணா என்ற குணசேகரன் (30), அதே ஊரை சேர்ந்த எமர்சன் (25) ஆகிய 2 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப் படுகிறது. மேலும் சிலரை போலீசார் பல்வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக டி.ஐ.ஜி. லோகநாதன் நேரடி மேற்பார்வையில் இயங்கி வரும் தனிப்படை போலீசார், கிட்டத்தட்ட கொலைக்கான காரணங்கள் குறித்தும், யார்? யார்? படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவதாகவும், எனவே இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கின் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story