சிவன் கோவிலில் 4 சாமி சிலைகள் கொள்ளை கதவுகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை


சிவன் கோவிலில் 4 சாமி சிலைகள் கொள்ளை கதவுகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 31 July 2018 4:45 AM IST (Updated: 31 July 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே சிவன் கோவிலில் 4 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கோவிலின் கதவுகளை உடைத்து மர்மநபர்கள் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பூதப்பாண்டி,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ளது கடுக்கரை. இங்கு ஸ்ரீகண்டஈசுவரமுடைய நயினார் கோவில் உள்ளது. பழமையான இந்த சிவன் கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலில் ஊர் பொதுமக்கள் சார்பில் செல்வ கணபதி என்பவரை அர்ச்சகராக நியமித்தனர். அவர் பூஜைகள் நடத்தி வந்தார்.

நேற்று காலையில் பூஜைகள் செய்வதற்காக அர்ச்சகர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிக்கதவு மற்றும் உள்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவிலின் உள்ளே இருந்த 1½ அடி உயரமுள்ள நடராஜர், 1½ அடி உயரமுள்ள முருகன், 1½ அடி மற்றும் ¾ அடி உயரமுள்ள 2 அம்மன் சிலைகள் காணாமல் போய் இருந்தன. சிலைகள் இருந்த பீடங்கள் மட்டும் அப்படியே உள்ளன. பீடங்களில் இருந்து சிலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. 4 சாமி சிலைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரிய வந்தது.

கொள்ளை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. அது கோவிலின் உள்ளே இருந்து மோப்பம் பிடித்தபடி கோவிலின் வடக்குப்புறம் உள்ள தெப்பக்குளம் வரை சென்றது. அங்கேயே நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை போலீசார் பார்வையிட்டனர். அப்போது சாமி சிலைகளுக்கு அணிவிக்கப்படும் காசு மாலைகள் கோவில் வளாகத்துக்கு உள்ளே ஆங்காங்கே சிதறி கிடந்தன. கோவிலில் இருந்த இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. கொள்ளை போன சாமி சிலைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பழமையான சிவன் கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் வெளியூர் நபர்களாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும், உள்ளூர் நபர்களாகத்தான் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story